தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை எய்ம்ஸ் எப்போ வரும்? - ஷாக் கொடுத்த ஒன்றிய அரசு - madurai aiims rti

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை தொடங்கும் தேதி தற்போதுவரை இறுதி செய்யப்படவில்லை என ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

aiims
மதுரை எய்ம்ஸ்

By

Published : Aug 11, 2021, 6:37 AM IST

தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019 ஜனவரி 27ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் கட்டுமானம் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனாலும் இதுவரை சுற்றுச்சுவர் கட்டுமானத்தைத் தவிர வேறு பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தமானது கடந்த மார்ச் 26ஆம் தேதி இந்திய மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. மேலும், 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய் பிரிவு மற்றும் சில சேவைகளும் மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட இருக்கிறது.

புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ 1977.80 கோடிகள் எனவும் அதில் ரூ 1627.70 கோடிகள் 'ஜெய்கா' கடன் வாயிலாகவும் மீதம் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் எப்போ வரும்?

திட்ட அமலாக்க குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ்க்கு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் (நிர்வாகம்), கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவின் முதல் கூட்டமானது கடந்த ஜூலை 16ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா மதுரை எய்ம்ஸ் டெண்டர், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டுமான பணிகள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் கோரியிருந்தார். அதற்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

கட்டுமானம் தொடங்கும் தேதி தெரியாது

அதில், "திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர வேற எந்த டெண்டரும் விடப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி தற்போது இல்லை. கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன கட்டடங்கள் வரும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. விரிவான திட்ட மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை.

மதுரை எய்ம்ஸில் மருத்துவ மாணவர் சேர்க்கை வகுப்புகளைத் தொடங்குவதற்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது. விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி, ஆறரை ஆண்டுகள் ஆனதற்கு பின்னும் இதுவரை மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோயில்களில் நாளை வழிபாட்டுக்குத் தடை - அமைச்சர் சேகர் பாபு

ABOUT THE AUTHOR

...view details