திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சளாறு ஆற்றுப் படுகையில் அதிகமான அளவில் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஆற்றுப் படுகை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனி நபர் ஒருவர் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் குளிப்பட்டியை சேர்ந்த வெங்கடசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ”கனரக வாகனங்கள், ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மணல் திருட்டு நடைபெற்றுவருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறையும் நிலை உள்ளது.
இது போன்ற மணல் திருட்டு நடப்பதால், அங்கிருக்கும் அணைக்கட்டு உடையும் அபாயம் உள்ளது.மணல் திருட்டு தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு பல முறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள், உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட விரோத மணல் திருட்டு சம்பந்தமாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. மஞ்சளாரில் சட்ட விரோத மணல் திருட்டு சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சம்பத்தப்பட்ட ஆவணங்களுடன் பதிலளிக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 15ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:தொடர் குற்றச் செயல்கள்; 27 நாள்களில் 7 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!