மலாச்சி யானையின் வருகை
2007ஆம் ஆண்டு அந்தமானைச் சேர்ந்த ஆங் மின்ட் - மேஸன் தம்பதி தாங்கள் வளர்த்த பல யானைகளுள் ஒன்றை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாகத் தர விரும்பினர். அதன்படி, 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அந்த யானையை லட்சுமணன் என்பவரின் மனைவி இந்திராவிடம் அந்தமான் தம்பதிகள் ஒப்படைத்தனர்.
யாசகம் பெற்ற மலாச்சி
இந்திரா மலாச்சி யானையை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல், மதுரை வீதிகளில் யாசகம் பெற வைத்தும், நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தும், அதை துன்புறுத்தி வருமானம் பார்த்து வந்தார்.
யாசகம் பெறும் மலாச்சி யானை மின்சாரம் தாக்கி பாகன் உயிரிழப்பு
2016ஆம் ஆண்டு மலாச்சியின் மேல் அமர்ந்து தெருக்களில் பாகன் சென்றபோது, உயர்அழுத்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த விபத்தில் மலாச்சியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பின்னர் மீண்டெழுந்தது.
கிராம மக்கள் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம், வடபழஞ்சிக்கு அருகேயுள்ள தென்பழஞ்சி கிராமத்தில் அந்த யானைக்கு தனியாக கொட்டம் வைத்து இந்திரா பராமரித்து வந்த நிலையில், வாரத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் இந்தக் கொட்டத்தில் யானை இருந்தாலே அதிசயம்தான். பெரும்பாலும் வேனில் ஏற்றி எங்கேனும் கொண்டு சென்றுவிடுவார்கள் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர்:
யானையை மீனாட்சி கோயிலில் ஒப்படைக்க சொன்னதை செய்யாமால் அதன் காப்பாளர் தெருக்களில் யாசகம் பெற வைப்பதோடு, துன்புறுத்தவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மேலாண்மை, பராமரித்தல் சட்டம் 1960 விதிகளின்படி யானையை இவ்வாறு துன்புறுத்துவது மிகத்தவறானது என சென்னையைச் சேர்ந்த இன்கேர் என்ற அமைப்பின் சார்பாக விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், யானையை முறைகேடாக பயன்படுத்திய காரணத்திற்காக இந்திராவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், யானையைப் பிச்சையெடுக்க வைத்து துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அதை பறிமுதல் செய்து வனத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், மிருகக்காட்சி சாலையிலோ அல்லது விலங்குகள் பாதுகாப்பு முகாமிலோ பராமரிக்கவும் வனத்துறைக்கு உத்தரவிட்டது.
நகரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக யானைகளின் இருப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், வனத்திலிருந்து கைப்பற்றி வந்து, தெருக்களில் யாசகம் எடுக்க வைப்பதும், வேடிக்கை காட்டி வித்தைக்கு தயார்படுத்துவதும் தவறான ஒன்று என நம் சட்டங்கள் வலியுறுத்தி வருகின்றன. அதனை மீறி இதுபோன்று செயல்படும் சிலருக்கு மலாச்சி யானை குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது மட்டுமல்ல... ஆகச் சிறந்ததுமாகும்...
சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தானமாக வந்த யானை மலாச்சி, மதுரை தெருக்களில் யாசகமெடுத்த அவலத்திலிருந்து மீட்டு, விலங்குகள் காப்பகத்திற்கோ அல்லது சரணாலயத்திற்கோ அனுப்ப வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வன விலங்கு ஆர்வலர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.
மலாச்சி யானை இருந்த கிராமம்