தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயில்களுக்கு குடிநீர், உணவு வசதி அளிக்க ஆட்சியருக்கு உத்தரவு! - water

மதுரை: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களுக்கு தேவையான தண்ணீர், உணவு வசதிக்காக 15 நாட்களுக்குள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

By

Published : May 16, 2019, 4:02 PM IST

புதுக்கோட்டையை சேர்ந்த தனபதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ராஜகோபால தொண்டைமான் மன்னனுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த வளாகத்தில் பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் இருந்தன. மயில்கள் குரங்கு உள்ளிட்ட பல்வேறு பறவைகளும், விலங்குகளும் அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தன. ஏராளமான குளங்களும் இருந்தன. 1974இல் இந்தப் பகுதியில் யூக்கலிப்டஸ் மரங்கள் நட்டதால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் நிலையும் மாறிவிட்டது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விலங்குகள், பறவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது.

சுமார் ஆயிரம் மயில்கள் இருந்த நிலையில், கஜா புயல் பாதிப்பினை தொடர்ந்து பல மரங்கள் வேரோடு சாய்ந்ததில் பல மயில்கள் இடம் பெயர்ந்து விட்டன. தற்போது 500 மயில்கள் இந்தப் பகுதியில் உள்ள நிலையில், கடும் வறட்சி காரணமாக அனைத்து குளங்களும் வறண்டு விட்டன. இதனால், உயிர் வாழ ஏதுவான சூழல் இன்றி மயில்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடவடிக்கைகோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மயில்களின் உணவு மற்றும் குடிநீர் வசதிக்காக 15 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details