பொதுப்பணித் துறை பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை - மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: தண்ணீர் எடுத்துச் செல்ல பொதுப்பணித் துறை பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த கருங்கட்டான்குளம், நஞ்சை பட்டாதாரர் விவசாயிகள் நலச்சங்கம் செயலாளர் விஜயராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அவர் தாக்கல்செய்த மனுவில், "100 ஆண்டுகளுக்கு மேலாக முல்லைப்பெரியாறு தண்ணீரைப் பயன்படுத்தி கருங்கட்டான்குளம் நஞ்சை விவசாயம் சுமார் 800 ஏக்கர், சின்னமனூர் விவசாய பரப்பில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெல் விவசாயம் நடைபெற்றுவருகிறது.
சின்னமனூர், கருங்கட்டான்குளம், நஞ்சை ஆயக்கட்டு நிலங்களில் ஆழ்துளைக் கிணறு - பாசன வாய்க்கால் மூலமாக தண்ணீர் கிடைக்கும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதைச் சட்டவிரோதமாக மின் இணைப்பைப் பெற்று விதிகளுக்குப் புறம்பாக பைப் லைன் மூலமாக நீரை அருகில் உள்ள கிராமங்களில் கொண்டுசென்று விற்பனை செய்துவருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையை கேட்ட நீதிபதி அப்பகுதியில் குழாய் மூலமாக தண்ணீர் கொண்டுசெல்வதற்குப் பொதுப்பணித் துறை வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்து வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.