தென்காசி மாவட்டம் சிவகிரி, சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்த அருண்காந்த் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியில் பி.காம் (சிஏ) படிப்பை 2018 ஆம் ஆண்டு முடித்தேன். நான் போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். 2022ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அன்று கிரேடு II போலீஸ் பதவிக்கான பொது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உடனடியாக 16ஆம் தேதி அன்று கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்தேன். நான் 2022ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி அன்று எழுத்துத் தேர்வில் பங்கேற்று அதில் தேர்ச்சிப் பெற்றேன். எழுத்துத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் மொத்தம் 89 மதிப்பெண்கள் பெற்றேன். தொடர்ந்து நான் மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டேன். இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்தது. நான் காவலராக பணியில் சேர ஆர்வமுடன் இருந்தேன்.
இந்த நிலையில், கடந்த மே 16ஆம் தேதி, நான் ஒரு கிரிமினல் வழக்கில் தொடர்புடையதாகக் குறிப்பிட்டு, என்னை காவலர் பயிற்சிக்கு அழைக்கவில்லை. இதன் காரணமாக பணி நியமனம் வழங்க இயலாது என கூறிவிட்டனர். இது குறித்து விசாரித்தததில், என் மீதான வழக்கு, நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம் நடந்தது. அப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கோஷங்களை எழுப்பியவாறு , சிலர் ஆண்டாள் கோயில் கோபுரத்திற்குச் சென்றனர்.
அவர்களை காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் மனுதாரர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை குறிப்பிட்டு எனக்கு காவல் பணி வழங்கவில்லை. ஆனால் நீட் போராட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான குருவராஜ் என்பவர் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார். 2022 பிப். 01 ஆம் தேதி அன்று இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.