தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: அரசு பதிலளிக்க உத்தரவு - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் முறைகேடில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை

By

Published : Oct 2, 2020, 6:33 PM IST

தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 2017-ல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இதில் 1,33,568 பேர் பங்கேற்றனர். கடந்த 7.11.2017-ல் எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. பின்னர் 2, 110 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 பேர் முறைகேடு செய்து வெற்றிப்பெற்றிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 16.9.2017-ல் நடைபெற்ற எழுத்துத்தேர்வை ரத்து செய்வதாகவும், மறுத்தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 2018-ல் அறிவிப்பு வெளியிட்டது.
தேர்வில் முறைகேடு செய்து வெற்றிப்பெற்ற 196 பேரையும் நீக்கவேண்டும், தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் முறைகேடில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்.
நேர்மையான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்து பணி நியமனம் செய்யக்கோரி மதுரை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 29 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details