தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா முடிவுகளை விரைவில் வெளியிடக்கோரிய வழக்கு: அதுதொடர்பான வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் கரோனா சோதனை முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கை, அது தொடர்பான வழக்குகளுடன் சேர்த்துப் பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

hc
hc

By

Published : Sep 18, 2020, 8:04 AM IST

திருச்சி மாவட்டம் வீரேஸ்வரம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சிவா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது. கரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வழங்க வேண்டும் என்பது போன்ற எவ்வித விதிகளும் பிறப்பிக்கப்படவில்லை.

தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோருக்கு கரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவராமல் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை. மாரடைப்பு, இதயக் கோளாறுகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும் முதல் உதவி செய்யக்கூட மருத்துவமனை நிர்வாகம் தயங்குகிறது. இதன்காரணமாக சில நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.

எனது மனைவிக்கும் இதுபோல கரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவர 8 நாட்களுக்கும் மேல் தாமதம் ஆன நிலையில், பல நாள்களுக்குப் பிறகு அவரை பரிசோதித்த மருத்துவர், முன்கூட்டி அழைத்து வந்திருந்தால் பிரச்னை குறைவாக இருந்திருக்கும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோல பலரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகவே, குறைந்தபட்சம் அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் கரோனா பரிசோதனை முடிவுகளையாவது விரைவாக வெளியிடக்கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இது போன்ற கோரிக்கைகளைக் கொண்ட வழக்குகளுடன் சேர்த்துப் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details