மதுரையைச் சேர்ந்த சோஷியல் ஜஸ்டிஸ் ஃபோரம் எனும் அமைப்பின் செயலர் இருளாண்டி, “மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தினாலும், மணல் தொடர்ச்சியாக எடுக்கப்படுவதால் ஏற்படும் விளைவு ஒன்றே. எனவே தமிழ்நாட்டில் ஆற்றுப்படுகைகளிலிருந்து மணல் எடுப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில் மணல் எடுப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதேபோல் புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டனும் “மணல் திருட்டை தடுக்க முக்கிய சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் இணைய வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த இரு வழக்குகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு,
- உச்சநீதிமன்றம் மணல் அள்ளுவதை முறைப்படுத்த அளித்த உத்தரவின் அடிப்படையில், மாவட்டம் மற்றும் தாலுகா அளவிலான கண்காணிப்புக்குழுவை சமூக ஆர்வலர்கள் மற்றும் கனிம வள அலுவலர்கள் இருக்கும் வகையில் மாற்றியமைக்க தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு உத்தரவு.
- மணலுக்கு மாற்றாக இருக்கக்கூடிய எம்.சாண்ட் (m-sand) பயன்பாட்டை அதிகரிப்பது, மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்க வேண்டும்
- மணல் தேவைப்படுவோர் கட்டடத்துக்கான வரைபட அனுமதியை வழங்கி அதற்கு தேவைப்படும் மணலை மட்டுமே பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்
- அரசு மணல் குவாரிகள் அமைக்க விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்து வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க...மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை