ஏலக்காய் ஏலம் நடத்த நடத்தக் கோரிய வழக்கு முடிவு!
மதுரை: தேனி மாவட்டம் போடியில் ஏலக்காய் ஏலம் நடத்தக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "இடுக்கி மாவட்ட பாரம்பரிய ஏலக்காய் உற்பத்தி நிறுவனம் 250 பாரம்பரிய விவசாயிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. கேரள அரசின் நறுமணப்பொருள் வாரியத்தின் சார்பில் கேரள மாநிலம், புத்தடியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம், போடியிலும் வாரந்தோறும் மின்னணு ஏலம் நடத்தப்படும்.
கடந்த மார்ச் மாதத்தில் நடக்க வேண்டிய ஏலம் கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. இதனால், சுமார் 10 டன் ஏலக்காய் குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் ஊரடங்கில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
போடியில் மட்டுமே ஏலம் நடத்த வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். நீண்ட நாட்களுக்கு குடோனில் இருந்தால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காது. இதனால், சிறு, குறு உற்பத்தியாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, போடியில் ஏலக்காய் ஏலம் நடத்தவும், இதற்காக கேரள குடோன்களில் இருந்து ஏலக்காய் மாதிரி பாக்கெட்டுகளை போடிக்கு கொண்டுவரவும் அனுமதிக்க வேண்டும்"
என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘‘போடியில் மாற்றுத்தேதியில் ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.