மதுரை:மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த அக்.17ஆம் தேதி திண்டுக்கல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் 3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில், முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பள்ளியின் தாளாளரைத் தொடர்பு கொண்டபோது, மழை காரணமாக விடுதியின் தரை வழுக்கியதாகவும், அதனால் மாணவி கீழே விழுந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். ஆனால், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் அளித்த புகாரில் மாணவி மூன்றாம் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறுமாறு பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவிக்கு முறையான இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆகவே, திண்டுக்கல் தனியார் பள்ளியின் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்ததில், முதுகெலும்பு முறிவு ஏற்பட்ட மாணவிக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். பள்ளி நிர்வாகம் தரப்பிலும் மாணவிக்கு 10 லட்ச ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.