மதுரை:தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழகத்தில் பொங்கல் திருவிழா, அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2017ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு (TN Govt Pongal Gift) தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழர்கள் உள்பட சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
20 வகையான விவசாயப் பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பும், வேஷ்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது. இந்த வேஷ்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாயப் பொருட்கள் அருகிலுள்ள மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன.
கமிஷன் பெற்றுக்கொண்டு சில சமயங்களில், அந்த கடைகள் தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதனால் அரசின் நோக்கம் முழுமை அடையாமல், பரிசுத்தொகுப்பினை பெறுவோரும் திருப்தி அடையாத நிலை உள்ளது. இதற்கு மாற்றாக தமிழக அரசின் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளும் பலனடைவர்.