மதுரை:பாஜக மாநிலச் செயலாளராக இருப்பவர் S.G சூர்யா மதுரை மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசனுக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சூர்யாவிற்கு ஜாமீன் கோரிய வழக்கில், சைபர் கிரைம் போலீஸார் சூர்யாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர்.
இதனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மதுரை கிரைம் போலீஸில் ஆஜராகி 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் S.G. சூர்யா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''தனக்கு வாய் பேச முடியாத தாய், 100 வயதான தாத்தா உள்ளனர். மேலும் தனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். அவர்களை நான் தான் கவனிக்க வேண்டும்.
எனவே, எனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எனது ஜாமீன் நிபந்தனையை மாற்றம் செய்து சென்னையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் ஜாமீன் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும்'' என மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சிவகடாட்சம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.