தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2020, 1:36 PM IST

ETV Bharat / state

இந்திய முறை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழக்கு: நகராட்சி நிர்வாகத்துறை செயலருக்கு உத்தரவு

மதுரை: இந்திய முறை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரிய வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் மூன்று மாதத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை

சென்னை, மதுரை, திண்டுக்கல், வேலூர், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி மருத்துவர்கள் 15 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில்,"நாங்கள் இந்திய முறை மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானியில் பட்டம் பெற்றுள்ளோம். கடந்த 1989ல் பணியில் நியமிக்கப்பட்டோம். கடந்த 1996 மாநகராட்சி பணி விதிகளின் படி பணியாற்றுகிறோம்.

இந்திய மருத்துவ முறையின் கீழ் நியமிக்கப்படுவோருக்கு இதுவரையில் பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ வழங்கப்படவில்லை.

கடந்த 26.11.2010ல் வெளியான நகராட்சி நிர்வாக அரசாணையில் அல்லோபதி மருத்துவர்களுக்கி ஊதிய உயர்வுடன் கூடிய காலமுறை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு இதுபோல் எதுவும் வழங்கப்படவில்லை.

நாங்களும் அதே நிலையில் மருத்துவர்களாக பணியாற்றுகிறோம். எனவே, எங்களுக்கும் ஊதிய உயர்வுடன் கூடிய காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம். நகராட்சி நிர்வாக ஆணையர் எங்களது கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

ஆனால், அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கடந்த 2010ல் இந்திய முறை மருத்துவர்களும், அல்லோபதி மருத்துவர்களும் ஒரே விதமான சம்பளம் பெற்றோம். ஆனால், தற்போது அவர்கள் மட்டும் அதிகளவில் சம்பளம் பெறுகின்றனர்.

10 ஆண்டுக்கும் மேலாக பதவி உயர்வின்றி, மிக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறோம். பலர் 25 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், நகராட்சி நிர்வாக ஆணையரின் பரிந்துரையை தகுதி, முன்னுரிமை அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் 3 மாதத்திற்குள் பரிசீலித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பான விவரத்தை மனுதாரர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details