மதுரை:மதுரை பாண்டியன் ஓட்டல் அருகே உள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், "மதுரை சாத்தமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சமூக ஊடகங்களில் ஒரு வைரல் வீடியோ பரவி வந்தது. கல்லூரி மாணவர்கள் 3 பேர் பொறுப்பற்ற வகையில் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்கின்றனர்.
பைக்கில் வேகமாக சென்றபடியே, கையில் வைத்திருந்த மதுபாட்டில்களை குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை அண்ணா நகர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில், பின் விளைவுகளை யோசிக்காமல் செய்துவிட்டோம். எனவே, எங்களுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என மனுவில் மாணவர்கள் கூறி உள்ளனர். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நேற்று (மார்ச்.4) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், கல்லூரி மாணவர்கள் விளைவுகளைப் புரிந்துகொள்ளாமல், பின் விளைவுகளை அறியாமல் சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில் குடித்துகொண்டே பைக்கில் வேகமாக சென்றபோது வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றும் செய்து உள்ளனர்.
மனுதாரர்கள், தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர். இனி மேல் இது போன்று நடக்காது. இந்த வழக்கில், மனுதாரர்களான கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டால் தொழில், எதிர்காலம் பாழாகிவிடும். எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் இந்த நீதிமன்றத்தால் விதிக்கப்படும் எந்தவொரு கடுமையான நிபந்தனைக்கும் கட்டுப்படவும் தயாராக உள்ளனர். இதனால், மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாதிட்டார்.