தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறிவிப்பு பலகை விபத்து - உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு வட்டியுடன் ரூ.5 லட்சம் தர ஆணை - மதுரை செய்திகள்

கடந்த 2018-ல் சுங்கச்சாவடியின் அறிவிப்பு பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உயிரிழந்த நாள் முதல் 6% வட்டியுடன் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 26, 2022, 6:13 PM IST

மதுரை:திருச்சி-திண்டுக்கல் இடையேயான பொன்னம்பலம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சை என்பவர் உயிரிழந்த தனது மனைவிக்கு இழப்பீடு வழங்க கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று (டிச.26) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், 'கடந்த 2018ஆம் ஆண்டு மனுதாரரின் மனைவி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பொன்னம்பலம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சுங்கச்சாவடியின் அறிவிப்பு பலகை மனுதாரரின் மனைவியின் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே தனது மனைவி உயிரிழந்தார். அதற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' எனவும் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் பயங்கர காற்று வீசியதன் காரணமாகவே அறிவிப்பு பலகை விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ’இது இயற்கையின் சீற்றம், மேலும் கடவுளின் செயலாகவே இருக்க வேண்டும். இதற்கு நெடுஞ்சாலைத்துறை பொறுப்பாகாது’ எனத் தெரிவித்தனர்.

‘நெடுஞ்சாலைத் துறையில் சுங்கச்சாவடியின் அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழந்ததற்கு கடவுளின் செயல் தான் காரணம் எனக் கூறுவதை இந்த நீதிமன்றம் ஏற்க முடியாது.

எனவே, மனுதாரரின் மனைவி கூலி தொழில் செய்யக்கூடியவர். எனவே, அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடை உயிரிழந்த நாளிலிருந்து தற்போது வரை ஆறு சதவீதம் வட்டியுடன் வழங்க’ உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - உயிர் தப்பிய ஓட்டுநர்!

ABOUT THE AUTHOR

...view details