தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏலக்காய் ஏலம் நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: தேனி மாவட்டம் போடியில் ஏலக்காய் ஏலம் நடத்த அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

By

Published : May 28, 2020, 4:17 AM IST

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இதுகுறித்து தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'இடுக்கி மாவட்ட பாரம்பரிய ஏலக்காய் உற்பத்தி நிறுவனம் 250 பாரம்பரிய விவசாயிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. கேரள அரசின் நறுமணப்பொருள் வாரியத்தின் சார்பில் கேரள மாநிலம், புத்தடியிலும்; தமிழ்நாட்டில் தேனி, போடியிலும் வாரந்தோறும் மின்னணு ஏலம் நடத்தப்படும்.

கடந்த மார்ச் மாதத்தில் நடக்க வேண்டிய ஏலம் கரோனா காரணமாக நடத்தப்படவில்லை. இதனால், சுமார் பத்து டன் ஏலக்காய் குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் ஊரடங்கில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. போடியில் மட்டுமே ஏலம் நடத்த வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் கருதுகின்றனர்.

நீண்ட நாட்களுக்குக் குடோனில் இருந்தால், விவசாயிகளுக்கு ஏலக்காய் மூலம் உரிய விலை கிடைக்காது. இதனால், சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போடியில் ஏலக்காய் ஏலம் நடத்தவும்; இதற்காக கேரள குடோன்களில் இருந்து ஏலக்காய் மாதிரி பாக்கெட்டுகளை போடிக்கு கொண்டுவரவும் அனுமதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் விசாரித்தனர். அரசுத் தரப்பில்,'போடியில் ஏலம் நடத்துவது தொடர்பாக அலுவலர்கள் ஆலோசனை நடக்கிறது. இதில் சுமுக முடிவெடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் ஏலம் நடத்த அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:உயர் நீதிமன்ற உத்தரவு: குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!

ABOUT THE AUTHOR

...view details