நீட் தேர்வில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீடு குறித்து திங்கட்கிழமை நல்ல முடிவு எட்டப்படும் என நீதிமன்றம் நம்புகிறது எனக் கூறி நவம்பர் 2ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது
நீட் தேர்வு 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது அரசு தரப்பில் கர்நாடக மாநிலத்தில் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது எனவும்; அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் உயர் நீதிமன்றக்கிளையில் எடுத்துரைக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் கர்நாடக மாநிலத்தில், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 15 விழுக்காடும் கன்னட மொழியில் பயிலும் மாணவர்களுக்கு 5 விழுக்காடும் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது நீதிபதி கூறும்போது, நீதிபதி கலையரசன் ஆய்வறிக்கையில் அரசு மாணவர்கள் வேலை செய்துகொண்டே படித்து வருகின்றனர் என்பது தெரியவருகிறது. இதனை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் உள் ஒதுக்கீடு தொடர்பாக தவறான கருத்துகள் வெளியிடுபவர்களுக்கு உண்மை நிலை புரியும். அரசியல் கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி தேச நலனுக்கு எதிராகச் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.