தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லோக் ஆயுக்தா தலைவர் வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு - மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை: லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், மாவட்ட நீதிபதி ஜெயபாலன் ஆகியோரின் நியமனத்தை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை, அது தொடர்பான பிற வழக்குகளுடன் பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்

By

Published : Jun 12, 2019, 5:53 PM IST

மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில், "ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஊழலை அறவே நீக்கும் நோக்கத்தில் லோக் ஆயுக்தா சட்டம் 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அரசு, பொது விவகாரங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போதும், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போதும் அவற்றை முறையாக விசாரிப்பது லோக் ஆயுக்தாவின் கடமை. தமிழகத்தில் 2018ஆம் ஆண்டிலேயே லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்தது.

லோக் ஆயுக்தா சட்டப்பிரிவு மூன்றின்படி லோக் ஆயுக்தாவின் தலைவராக நியமிக்கப்படுபவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகிய ஏதேனும் ஒன்றில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்கவராகவோ இருக்க வேண்டும். அவர் தலைமையில் அமைக்கப்படும் குழுவில் இரண்டு உறுப்பினர்கள் சட்டத்துறையை சேர்ந்தவர்களாகவும், இருவர் சட்டத்துறையில் சாராதவர்களாகவும் இருக்க வேண்டும். லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள் எவ்விதமான அரசியல் கட்சிக்கும் தொடர்பு உள்ளவராக இருக்கக் கூடாது.

இந்நிலையில், பணியாளர்கள், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி லோக் ஆயுக்தா குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸையும் அதன் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளனர். லோக் ஆயுக்தா குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேவதாஸ் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு நெருங்கிய உறவினர். அதேபோல் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜெயபாலன் 24.7 ஆண்டுகள் மட்டுமே பணி அனுபவம் உள்ளவர். லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர் நியமன விதிகளுக்கு உட்படாத நிலையில் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், மாவட்ட நீதிபதி ஜெயபாலன் நியமனத்தை தகுதிநீக்கம் செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகுதியானவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், சத்யநாராயணன் - புகழேந்தி அமர்வு, இந்த வழக்கை லோக் ஆயுக்தா தொடர்பான பிற வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details