மதுரை ஆனையூரைச் சேர்ந்த திவ்யா என்ற திவ்யபாரதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், வழக்கறிஞர் பாஸ்கர் என்பவர் மதுரம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில், கக்கூஸ் ஆவணப்படம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும், இரு சமூகங்களிடையே சாதிக்கலவரங்களை தூண்டும் விதமாக இருப்பதாகவும் அதைத் தயாரித்து வெளியிட்ட என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகாரளித்துள்ளார்.
அதனடிப்படையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தவறானது. நான் வழக்கறிஞர் படிப்பை முடித்த நிலையில் பதிவு செய்வதற்காக காத்துள்ளேன். சமூக அக்கறை கொண்டு, அதற்கு எதிரானவற்றிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறேன். குறிப்பாக கையால் மலம் அள்ளும் முறையை அகற்ற அதிக முனைப்போடு போராடி வருவதோடு, அப்பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தேவையான நிவாரணங்களையும் பெற்றுத் தந்து வருகிறேன். 21 பேர் இந்த பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கான இழப்பீடை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு இல்லை.
எனவே மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே அந்த குறும்படத்தைத் தயாரித்து இயக்கினேன். அத்தொழிலில் ஈடுபடுவர்களில் பெரும்பாலானவர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என அரசின் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.