விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள செங்குளத்தைச் சேர்ந்த கருப்பையா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "அருப்புக்கோட்டையிலிருந்து செங்குளம் ஊருக்குச் செல்ல கண்மாயை கடந்துதான் குடியிருப்புப் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
வேறு மாற்றுப்பாதை இல்லை. மழைக் காலங்களில் இப்பகுதியில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் குடியிருப்புப் பகுதிக்குச் செல்வதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கவும், செங்குளம் கண்மாயை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, அருப்புக்கோட்டை, செங்குளம் பகுதியில் நடை மேம்பாலம் கட்டுவது தொடர்பாக விருதுநகர் ஆட்சியர் எட்டு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.