மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பிள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக தங்களது உடற்கல்வி ஆசிரியருடன் சென்றனர்.
அவர்கள் போட்டியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும்போது, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியைச் சுற்றி பார்த்துவிட்டு, செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி பலியாகினர். காவிரி ஆற்றில் நான்கு மாணவிகளும் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தனர்.
எங்கள் குழந்தைகளின் மரணத்திற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஜெப்பா சேகேயு இப்ராஹிம், ஆசிரியைகள் பொட்டுமணி, திலகவதி ஆகியோர்தான் பொறுப்பு. இதில் மாணவிகளுடன் சென்ற ஆசிரியைகள் பொட்டுமணி, திலகவதி ஆகியோர் பாதியிலேயே சென்றுவிட்டனர். விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஆசிரியர்களின் கடமையாகும். ஆனால், இதில் ஆசிரியர்கள் கடமையை செய்யத் தவறிவிட்டனர்.