மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
அதில், ‘உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மில்லியன் பேர் மதுவால் உயிரிழப்பதும், இது மொத்த உயிரிழப்பில் 5.3 விழுக்காடும் என்றும், 200-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மது பழக்கம் காரணமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
பல நாடுகளில் மது குடிக்க உரிமம் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதனால் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும். இதனால் அனைவருக்கும் மது கிடைப்பது தடுக்கப்படும்.
எனவே, தமிழ்நாட்டிலும் வெளிநாட்டு மதுபானங்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உரிமம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இதற்கு தமிழ்நாடு உள்துறை இணைச் செயலர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘மதுபானங்கள் விற்பனையின்போது 21 வயதிற்கு கீழானவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'மது பாட்டில்களில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக் கூடாது' என ஸ்டிக்கர் ஒட்ட மது உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது வாங்க வருபவர்களின் வயது குறித்த சந்தேகம் வரும்போது, அவர்களது ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு அல்லது அவர்களின் புகைப்படம் கொண்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சோதிக்குமாறும், அரசு தரப்பில் மது விற்பனை தொடர்பாக வழங்கப்பட்டுள்ள விதி முறைகளை மீறுவோர் மீது பணியிடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.