தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Breastfeeding: தாய்ப்பால் புகட்ட வேலை தடையில்லை - மகப்பேறு மருத்துவர் சுஜாதா சங்குமணி.. - breastfeeding

World Breastfeeding Week: ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு தாய்ப்பாலின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி மகப்பேறு மருத்துவர் சுஜாதா சங்குமணியின் விரிவான விளக்கம்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தாய்ப்பால் புகட்டும் வழிமுறை குறித்து மருத்துவர் விளக்கம்
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தாய்ப்பால் புகட்டும் வழிமுறை குறித்து மருத்துவர் விளக்கம்

By

Published : Aug 1, 2023, 9:32 AM IST

Updated : Aug 2, 2023, 5:17 PM IST

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தாய்ப்பால் புகட்டும் வழிமுறை குறித்து மருத்துவர் விளக்கம்

மதுரை:தற்போதைய பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் பெரும்பாலான பெண்கள் ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற நிலையில், மகப்பேறு காலத்தின் போது தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதில் சில சிக்கல்களையும், சந்தேகங்களையும் சந்தித்து வருகின்றனர்.

குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளன. தாய்ப்பால் கலப்படமற்ற இயற்கை உணவு. இத்தகைய தாய்ப்பால் நோய் எதிர்ப்பு சக்தியாகவும், குழந்தையின் மரணத்தை தடுக்கவும், மேலும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் தாய்ப்பால் கொடுப்பது என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

எனவே தாய்ப்பாலை அவசியம் குழந்தைகளுக்குத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி, சர்வதேச தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மதுரையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் சுஜாதா சங்குமணி தாய்ப்பாலின் மகத்துவம், குழந்தைக்கும், தாய்க்கும் எவ்வாறு பயன் அளிக்கிறது? குழந்தைக்கு தாய்ப்பாலை எவ்வாறு புகட்ட வேண்டும்? வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை புகட்டும் வழிமுறைகள் ஆகியவை குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அவர் கூறிய விபரங்களாவன,

தாய்ப்பாலின் மகத்துவம்:ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. அந்தக் காலத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து யாரும் எடுத்துச் சொல்லவுமில்லை, அறிவுறுத்தவுமில்லை. காரணம், அவர்களுக்கு தாய்ப்பாலைத் தவிர எந்த தேர்வுமில்லை . ஆனால், தற்போது பல்வேறு வகையான உணவு முறைகள் உள்ளன.

செயற்கைப்பால் கூட வந்துவிட்டன. அதனைத் தற்போது தாய்மார்கள் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். இது தவறான செயல். தாய்ப்பாலின் மகத்துவத்தை முதலில் கர்ப்பிணித் தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தையை வயிற்றில் சுமக்கின்றபோதே அனைத்துப் பெண்களும் நாம்தான் நம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்போகிறோம்.

வேறு மாற்று எதுவுமில்லை என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து அவர்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய சிறப்பு உணவுகளை கர்ப்ப காலத்தில் இருக்கும்போதே எடுத்துக் கொள்வது அவசியம். சில மகப்பேற்றுத் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின்போது அவர்களது மார்பின் முனை உள்ளிழுத்தோ அல்லது சுருங்கியோ காணப்பட்டால், மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிக்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சி முறைகளை மேற்கொண்டு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீம்பால் அவசியம்:சுகப்பிரசவமோ அல்லது அறுவை சிகிச்சை மூலமான பிரசவமோ எதுவாக இருந்தாலும், குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பாலைக் கொடுக்கத் துவங்க வேண்டும். இதற்காகவே குழந்தை பிறந்தவுடன் தாயின் நெஞ்சுப்பகுதியில் குழந்தையை குப்புறப் படுக்க வைப்பார்கள். இதன் மூலம் தாய்க்கு உணர்வு தூண்டப்பட்டு, பால் சுரக்கும் வேகமும் அதிகரிக்கும். குழந்தை முதன் முதலாக தாயின் மார்பகத்தில் வாயை வைத்து சுவைக்கும்போதே, அந்த உணர்வால் தூண்டப்பட்டு பால் சுரப்பு அதிகரிக்கும்.

சுவைக்கும் முறை குறித்து குழந்தைக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். இந்த நேரத்தில் தாய்க்கும், குழந்தைக்குமான தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவது மருத்துவர் மற்றும் செவிலியரின் கடமை என நான் கருதுகிறேன். தன்னுடைய பாலே குழந்தைக்குப் போதுமானதா என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு இருப்பதை நான் பார்க்கிறேன். இது தொடர்பான குழப்பங்களும் பெண்களுக்கு ஏற்படுகிறது.

முதல் இரண்டு நாள் தாய்க்கு சுரக்கக்கூடிய சீம்பால் மிகச் சிறந்த உணவாகும். அந்த சீம்பால் குழந்தையின் செரிமானம், மலம் வெளியேறுதல் போன்ற அனைத்திற்கும் சிறந்த வகையில் உதவி புரிகிறது. இந்த சீம்பால் தனது குழந்தைக்காகவே இயற்கை படைத்த தனித்துவம் மிக்கது என்பதை தாய்மார்கள் முதலில் உணர வேண்டியது அவசியம். இதனைக் கட்டாயம் குழந்தைக்கும் புகட்ட வேண்டும் என்ற உளவியல் சிந்தனை வளர வேண்டும்.

குழந்தை பிறக்கும்போது பல்வேறு உடல் மற்றும் மன அழுத்தங்கள் தாய்மாருக்கு இருக்கக் கூடும். இருப்பினும் தாய்ப்பால் குறித்த இந்த சிந்தனையில் பெண்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படக்கூடாது. தாய்ப்பால் மூலமாக குழந்தைக்குக் கிடைக்கக்கூடிய அந்த பலன்களை குழந்தை தவறவிடக்கூடாது என்ற எண்ணம் ஒவ்வொரு தாய்மாருக்கும் இருக்க வேண்டும்.

தாய்ப்பால் சுரப்பு:தாய்ப்பால் குடித்து வளர்கின்ற குழந்தைக்கும், மாறாக பிற செயற்கை பாலைக் குடித்து வளர்கின்ற குழந்தைக்கும் மிகப் பெரிய வேறுபாடு காணப்படும். செயற்கைப் பாலை அருந்தி வளரும் குழந்தை உடல் பருத்தும், தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியோடும், வலுவோடும் இருப்பதைக் காணலாம்.

பொதுவாகவே சுரக்கின்ற பால் குழந்தைக்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை ஒரு பெண் எவ்வாறு உணர முடியும் எனில், அக்குழந்தை அழாமல் பால் குடித்தல், குறைந்தபட்சம் 2லிருந்து 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழித்தல், ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் 700 கிராம் எடை அதிகரித்தல் போன்றவை குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கிறது என்பதை உறுதி செய்யும் காரணிகளாகும். குழந்தை தூங்குகின்ற காரணத்தால் பால் கொடுக்காமல் இருக்கும்போது மார்பு கட்டும்.

அந்த அடிப்படையிலும் போதுமான பால் நமக்கு சுரக்கிறது என்பதை ஒரு தாய் உணர முடியும். பொதுவாக குழந்தை எப்போதெல்லாம் அழுகிறதோ, அப்போதெல்லாம் பால் கொடுக்க வேண்டும். அது குறைந்தபட்சம் 3 மணி நேரம் என வரையறுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தூங்குகின்ற குழந்தையை எழுப்பி தாய்ப்பால் புகட்ட வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு குழந்தைக்கும் நேர வித்தியாசம் மாறுபடும். ஆகையால் இங்கு தாயின் புரிதலே மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

குறைந்தபட்சம் 6 மாதம்:குழந்தைக்கு பால் புகட்டும்போது ஒரு மார்பகத்தின் முழுப் பாலையும் புகட்டிவிட்டுத்தான் அடுத்த மார்பகத்திற்கு மாற்ற வேண்டும். முதலில் சுரக்கும் பாலில் சில சத்துக்களும், அதற்குப் பிறகு சுரக்கின்ற பாலில் சில சத்துக்களும் நிறைந்திருக்கும். ஆகையால் ஒரு மார்பகத்திலிருந்து புகட்டக் கொடுக்கும்போது, அதனை முழுமையாகக் கொடுத்துவிட்டு பிறகே மற்ற மார்பகத்திற்கு மாற்ற வேண்டும்.

செயற்கைப் பால் கொடுப்பதன் மூலம் செரிமானக் கோளாறுகளோ அல்லது தொற்றுகளோ ஏற்பட வாய்ப்புண்டு. குழந்தைக்கு ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு, சளி, இருமல் மற்றும் நுரையீரலைத் தாக்கக்கூடிய கிருமிகளுக்கு எதிரான சத்துக்கள் தாய்ப்பாலில்தான் அதிகம் உள்ளது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவாகின்றன. மேலும், நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக இருக்கும்.

இவற்றையெல்லாம் மனதில் வைத்து தாய்ப்பால் புகட்ட வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேபோன்று குழந்தைக்கு மார்பகத்தின் முனையை மட்டுமே சுவைக்கக் கொடுக்காமல், கருமை வளையத்தையும் சேர்த்து புகட்டக் கொடுப்பதுதான் மிகச் சிறந்த தாய்ப்பால் புகட்டும் முறை.

முனையை மட்டுமே சுவைக்கக் கொடுப்பதால் தாய்க்கு அவ்விடத்தில் புண்ணோ, தொற்றுகளோ ஏற்பட வாய்ப்பு உண்டு. சரியான முறையில் அமர்ந்து பால் புகட்டுவது அவசியம். நிறைய நேரங்கள் கொடுக்க வேண்டியதாக இருக்கலாம். குழந்தைக்கு முதுகு வலி ஏற்படாமல் தவிர்க்க இதையெல்லாம் கருத்திற் கொள்வது அவசியம். குழந்தைக்கு பால் புகட்டிய உடன் தோளில் போட்டு முதுகுக்குப் பின்புறம் இதமாய் ஏப்பம் வரும்வரை தட்டிக் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகே குழந்தையை படுக்க வைக்க வேண்டும்.

மார்பகப் புற்று தடுக்கப்படும்:தாய்ப்பால் புகட்டுவதன் மூலமாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைகிறது. ஆறு மாதத்திலிருந்து ஓராண்டுகள் வரை தாய்ப்பால் புகட்டியவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. கருப்பை சுருங்கி, முன்னர் இருந்த நிலையில் உள்ளே செல்வதற்கு தாய்ப்பால் புகட்டுவது உதவி செய்கிறது.

மேலும் பெண்கள் அதிக எடை கூடாமல் இருப்பதற்கும் பேருதவி புரிகிறது. குழந்தை பிறந்த முதல் மூன்று மாதத்தில் சத்தான உணவுகளைச் சாப்பிடும் பெண்கள், அதற்குப் பிறகு அதில் அக்கறை காட்டுவதில்லை. இதன் காரணமாக, குழந்தைக்கு தேவையான சத்துக்கள் தாய்ப்பாலின் வழியே சென்றாலும், தாய் போதுமான சக்தி இன்றி உடல் மெலிவைச் சந்திக்க நேரிடுகிறது. ஆகையால் தாய்ப்பால் புகட்டும் வரை சத்தான உணவுகளையும், மாத்திரைகளையும் சாப்பிடுவது அவசியம்.

சந்தோஷ மனநிலை: தாய் நல்ல மனநிலையில்தான் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டும். குழந்தை பிறந்த காலகட்டத்தில் பெண்ணுக்கு பல்வேறு வகையான மன அழுத்தங்கள் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் உருவாகின்றன. இதன் காரணமாக சில பெண்கள் தொடர்ந்து கண்ணீர் விட்டு அழும் சூழ்நிலையும் ஏற்படுகின்றது. இவை எதனையும் பெண்கள் மனதில் வைத்துக் கொள்ளவே கூடாது.

என்னுடைய கடமை குழந்தைக்குப் பால் புகட்டுவது என்ற சிந்தனை மட்டும்தான் இருக்க வேண்டும். குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ எழுப்புகின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை பெண்ணுக்கு இருக்கின்ற காரணத்தால், இந்த சூழலில் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு என்பது மிக மிக அவசியம். கடவுள் கொடுத்த குழந்தையை சந்தோசமாக வளர்த்தெடுப்பது நமது கடமை என்ற எண்ணம் மட்டுமே பெண்ணுக்கு மேலோங்கி இருக்க வேண்டும்.

தாய்ப்பாலை பழக்கப்படுத்துவோம்: 2023-ஆம் ஆண்டுக்கான தாய்ப்பால் தின முழக்கமாக, ‘வேலை செய்யும் பெற்றோருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல்’ என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அனைத்துப் பெண்களுமே வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்ற காரணத்தால், தாய்ப்பால் புகட்டுவதை அவர்களிடமும் ஊக்குவிக்க வேண்டும்.

அதனடிப்படையில், தங்களது தாய்ப்பாலை ஆரோக்கியமான முறையில் சுயமாகவோ அல்லது உறிஞ்சு குழாய் மூலமாகவோ ஒரு சில்வர் பாத்திரத்தில் சேகரித்து வைக்கலாம். பொதுவான தட்பவெப்பநிலையில் 2 மணிநேரம் வைத்திருந்து குழந்தைக்கு ஏற்ற வசதியில் புகட்டலாம். மேலும் அதே பாலை குளிர்சாதனப் பெட்டியில் 8 மணி நேரம் வரைகூட வைத்திருந்து பிறகு லேசாக சூடுபடுத்தி குழந்தைக்கு புகட்ட அறிவுறுத்தலாம்.

மார்பில் பால் கட்டிக் கொண்ட பின்னர் அதனைக் கொடுக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அதனால் ஒன்றும் தவறில்லை. தாராளமாக அந்தப் பாலையும் குழந்தைக்குக் கொடுக்கலாம். இனி வருகின்ற தலைமுறையினர் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு எந்த தேர்வுமில்லை என்ற மனநிலைக்கு நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்வதுடன் தாய்ப்பாலையே பழக்கப்படுத்துவோம்’ என்றார்.

இதையும் படிங்க:Thane accident: மேம்பால கட்டுமான பணியின் போது விபத்து: தானே அருகே 14 தொழிலாளர்கள் பலி!

Last Updated : Aug 2, 2023, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details