மதுரை:மதுரை மாநகர் பங்கஜம்ஜகாலனியைச் சேர்ந்தவர்கள் குணாளன், கதிரவன் மற்றும் அருண் சக்கரவர்த்தி. இவர்கள் 3 பேரும் மதுரை கீழமாசி வீதி பகுதியில் ஸ்டேஷனரி மற்றும் சோப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய 4 கடைகளை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக குணாளன் மற்றும் அவரது உறவினர்களான கதிரவன் மற்றும் அருண் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரும் ஜிஎஸ்டி வரியை முறையாக செலுத்தவில்லை என மதுரை மண்டல ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், மதுரை மண்டல ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், கடந்த 15 நாட்களுக்கு மேலாக சம்பந்தபட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில், 3 பேரும் தனது வர்த்தகத்தின் மூலமாக பல கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி, நேற்று (ஜூன் 7) காலை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை கடந்த 5 ஆண்டுகளாக வருவாயை மறைத்து பல கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக மதுரை மண்டல ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 3 பேரையும் கைது செய்தனர்.