தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரிடர் சேதங்களை அரசு ஏற்க வேண்டும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

எந்த நேரத்திலும் இயற்கை பேரிடர் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படும் சூழலில் பேரிடர் சேதங்களை அரசே ஏற்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-high-court
madurai-high-court

By

Published : Dec 23, 2022, 7:24 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், கழுமுகடாவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் சொந்தமாக மீன்பிடி படகுகள் வைத்துள்ளனர். இவர்களின் படகு 2018ஆம் ஆண்டு கஜா புயலில் சேதமடைந்தது. இதற்கு முறையே 12 ஆயிரம் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. கூடுதல் இழப்பீடு கேட்டு இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக நேற்று (டிசம்பர் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில், மனுதாரர்களின் படகுகள் சிறிதளவே சேதமடைந்துள்ளன. அதற்குரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் இழப்பீடு வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "நாம் தட்டவெட்ப நிலை மாறுதல் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். உலகம் முழுவதும் கால நிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் இயற்கை பேரிடர் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் பேரிடர் சேதங்களை அரசு ஏற்க வேண்டும். அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது.

இயற்கை பேரிடருக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி அரசு 2019ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி படகு முழுமையாக சேதமடைந்தால் 1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு என்பது சட்டப்பூர்வமானது. அது நன்கொடையும் அல்ல. இதனால் இழப்பீடு வழங்குவதை முறையாக செய்ய வேண்டும். எனவே, மனுதாரர்களுக்கு முறையே 1.38 லட்சம் மற்றும் 1.33 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை 8 வாரத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details