மதுரை: மதுரை மானகிரி செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதித்த பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பின் தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி வருகிறது.
இந்நிலையில், மதுரையில் பொங்கல் பண்டிகையையொட்டி உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பு வாய்ந்தவை. 2019ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை சாதி, மத ரீதியாக நடத்தக்கூடாது.
காளைகள் அவிழ்க்கப்படும் போது உரிமையாளர்களின் பெயர்களோடு சாதிப்பெயரைப் பயன்படுத்தி அறிவிக்கக்கூடாது. கடந்த காலங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசு அதிகாரிகள் முன்பாகவே சாதிப்பெயர்களோடு காளைகள் அவிழ்க்கப்படுகின்றன. இது உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது.
ஆகவே இந்தாண்டு நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் குறித்த அறிவிப்பின் போது உரிமையாளர்களின் பெயரோடு சாதிப்பெயர்களை அறிவிக்கக்கூடாது எனவும், போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கட்டாயம் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் தெரிவித்திருந்தார்.