தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதூர் பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிபவர் பாலசுப்ரமணி. இவர் கடந்த மாதம் மருத்துவத்திற்காக பத்து நாட்கள் விடுப்பு வேண்டும் என்று அனுமதி பெற்றுள்ளார். இதற்காக பணிமனை மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாகவும், மருத்துவ விடுப்பு விண்ணப்பம் அனுப்பியும் அனுமதி பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்று சம்பளம் எடுக்கும் போது தன்னுடைய கணக்கில் மருத்துவ விடுப்புக்கான பணமும் சேர்ந்து பிடித்தம் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணி, அலுவலர்களிடம் முறையிட்டுள்ளார். அதற்கு சரியான பதில் இல்லாததால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் புதூர் பனிமணையில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சம்பளத்தில் பிடித்தம் செய்ததால் ஓட்டுநர் தற்கொலை முயற்சி இதனைக் கண்ட மற்ற தொழிலாளர்கள் அலுவுலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பணிமனை மேலாளர் அசோக் குமார், மதுரை மண்டல பொது மேலாளர் ராஜசுந்தரம், தீயணைப்புத் துறை வீரர்கள் ஆகியோர் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.
இதுகுறித்து சக ஊழியர் செல்வ கணபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது போன்ற சம்பவங்கள் இப்பணிமனையில் அதிகம் நடைபெறுகிறது. விடுப்பு கொடுத்து வருகைப்பதிவேட்டில் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. இதனால் தொழிலாளர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது.
எனவே, தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும். அவர்களுக்குரிய அனைத்து சலுகைகளும் முறையாக வழங்கப்பட வேண்டும்" என்றார்.