மதுரை:கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த மணீஷ் காஷ்யப் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சித்தரிப்பு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் இது கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டவை என தமிழ்நாட்டு காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, இதனை பரப்புவோர் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அடையும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுகுறித்து போலி வீடியோக்களைப் பரப்பிய 4 பேர் மீது தமிழ்நாட்டு காவல் துறை அதிரடியாக வழக்குகளைப் பதிவு செய்தது. இதுபோன்ற போலி வீடியோக்களைப் பகிர்ந்த மணீஷ் காஷ்யப் (32) என்ற யூ டியூபர் மீது மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.