தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘எய்ம்ஸ் சித்தா மருத்துவமனை அமைய அரசு நிலம் வழங்க வேண்டும்’ - தமிழர் மரபு வேளாண்மை கூட்டியக்கம் கோரிக்கை - தமிழர் மரபு வேளாண்மை கூட்டியக்கம்

'திருச்சி-தஞ்சை பகுதியில் எய்ம்ஸ் சித்தா மருத்துவனை அமைய அரசு நிலம் ஒதுக்கித்தர வேண்டும். மத்திய அரசு இதற்கென ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தமிழர் மரபு வேளாண்மை கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 21, 2023, 8:54 PM IST

தமிழர் மரபு வேளாண்மை கூட்டியக்கம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வழி உழவர்கள், கிடைக்காரர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த தமிழர் மரபு வேளாண்மை கூட்டியகத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக்கென தனி கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும். அதற்கென்று தனி வாரியத்தை தற்சார்பு மிக்க உயர்மட்ட அதிகாரத்தோடு, நிதி வளத்தோடும் உருவாக்க வேண்டும். மரபு மாடுகளை வளர்க்கும் கிடைக்காரர்களுக்கு தனி நல வாரியத்தை ஏற்படுத்தி, காடுகளுக்குள் மேய்ச்சலுக்காக ஆடு, மாடுகளை அழைத்துச் செல்ல உள்ள தடையை நீக்க வேண்டும்.

சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதோடு அதற்குரிய நிலத்தை வழங்கி எய்ம்ஸ் சித்தா மருத்துவமனையை திருச்சி-தஞ்சை பகுதியிலே அமைக்க முன் வர வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, சித்த மற்றும் மரபு வழி மருத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உரிய கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். திருச்சியில் ஆயுர்வேதத்திற்கு கல்லூரி அமைப்பதெல்லாம் தேவையற்றது.

சித்த மருத்துவத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு இடம் மட்டும் ஒதுக்கித் தர வேண்டும். அதனை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். இதனை வலியுறுத்தி வருகின்ற மார்ச் 7-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை கிடைமாடு, ஆடு வளர்ப்போர், இயற்கை உழவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள இருக்கிறோம்.

தமிழ்நாடு அரசு இயற்கை வேளாண்மைக்குரிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் நியாயவிலைக்கடைகள், அரசு விடுதிகள், சிறைச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் அனைத்திலும் உயிர்ம வேளாண்மை விளைபொருட்களுக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்த வேண்டும். அரசு விழாக்களில் உணவு வழங்கும்போது இயற்கை வழி வேளாண் விளைபொருட்களையே பயன்படுத்த முன் வர வேண்டும்.

ராசாயன வேளாண்மையில் ஈடுபடுகின்ற உழவர்கள் தற்போது இயற்கை வழி வேளாண்மைக்கு மாறுகிற காலத்தில் குறிப்பாக குறைந்தது மூன்றாண்டுகளுக்கு அதற்கான இழப்பீட்டை மானியமாக வழங்க வேண்டும். கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இதுபோன்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கிடை ஆடு மற்றும் மாடு வளர்ப்பவர்களை இந்த மண்ணுக்குப் பயன்படக்கூடிய ஒரு சமூகமாக அங்கீகரிக்க வேண்டும்.

அதன் முதல்கட்டமாக தரிசுநிலம் என்ற பெயரால் மேய்ச்சல் நிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். அதேபோன்று வனப்பகுதிகளுக்கும் மேய்ச்சலுக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வதற்கும், மருத்துவ மூலிகைகளை சேகரிப்பதற்கும் தடைகளை நீக்க வேண்டும். 2006-ஆம் ஆண்டு வனஉரிமைச் சட்டத்தில் இதற்கெல்லாம் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாடு அரசின் வனத்துறை இச்சட்டத்திற்கு விரோதமாக ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வனத்திற்குள்ளே கீதாரிகளுக்கும், மூலிகை சேகரிப்போருக்கும் தடைவிதித்துள்ளது. உண்மையில், வனங்கள் பாதுகாக்கப்படுவதற்கு கால்நடைகள் மேய்ப்போரே முக்கிய காரணியாக உள்ளனர். ஆகையால் அவர்களை உள்ளே அனுமதிப்பதுதான் சரியான நடவடிக்கை. வனங்களில் காய்ந்து சருகாகிக் கிடக்கும் இலை தழைகள் மூலமே தீ விபத்து நேரிடுகிறது. இவற்றை கால்நடைகளை உண்பதால் வனம் பாதுகாக்கப்படுகிறது. இயற்கைக்கு மாறான இந்த தடை நடவடிக்கை உடனடியாக நீக்கப்பட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.641 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங்

ABOUT THE AUTHOR

...view details