மதுரை: திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் தன் மகன் தமிழகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குண்டர் சட்ட உத்தரவில் மாவட்ட ஆட்சியர்களுக்குப் பதிலாக மண்டல காவல்துறை அதிகாரிகள் (IG) குண்டர் சட்ட உத்தரவைப் பிறப்பிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு 19.06.2023 அன்று உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார். அதில் தற்போது இருக்கும் நிலையினை தொடர்வதே சரியானதாக அமையும். மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தடுப்புச் சட்டத்தை பிறப்பிப்பதே சரியானதாக இருக்கமுடியும்.
காவல்துறை ஐ.ஜிக்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கக்கூடாது. தற்போது தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. காவல் துறையைப் பொறுத்தவரை வடக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு என்று நான்கு மண்டலங்களில் நான்கு காவல்துறை தலைவர்கள் உள்ளனர்.