முதன் முறையாக ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மதுரை:உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா மதுரையைக் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நாளை (மே 5) அதிகாலை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், மதுரை தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயிலின் எதிரே உருவாக்கப்பட்டுள்ள ஆயிரம் பொன் சப்பரத்திலும் அதிகாலை 2.30 மணி முதல் 3 மணி வரை எழுந்தருள்கிறார். விஜயநகரப் பேரரசு மதுரையை ஆண்ட காலத்தில், அதன் குறிப்பிடத்தகுந்த மன்னராகக் கருதப்படும் திருமலை நாயக்கர், கள்ளழகருக்கு தேர் செய்து காணிக்கையாக வழங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தார்.
ஆனால், அழகர் கோயிலில் ஏற்கனவே தேர் இருந்ததால், புதிதாக மற்றொரு தேருக்கு கோயிலின் ஆகமவிதிகள் இடம் தரவில்லை. ஆகையால், தேர் போன்ற அமைப்பில் சப்பரம் ஒன்றை உருவாக்கித் தர சிற்ப வல்லுநர் ஒருவருக்கு உத்தரவிட்டிருந்தார். தான் நினைத்ததைவிட மிகச் சிறப்பாக அந்த சப்பரத்தை உருவாக்கித் தந்த சிற்பிக்கு ஆயிரம் பொன்னை பரிசாக வழங்கி மன்னர் சிறப்பித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த சப்பரம், 'ஆயிரம் பொன் சப்பரம்' எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு வரை, இந்த சப்பரத்தில்தான் கள்ளழகர் வைகையாற்றுக்குள் எழுந்தருளியதாகவும், பிறகு தங்கக் குதிரை பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் நாளடைவில் சப்பரத்தின் பயன்பாடு குறைந்து, கள்ளழகர் நிகழ்வில் வெறுமனே சம்பிரதாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சிறிதாக செய்து வைக்கப்பட்டு கருப்பண்ணசாமி கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு முதன்முறையாக பழங்கால முறைப்படி அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் பொன் சப்பரத்திலும் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதையும் படிங்க:இருவேறு சமூகத்தினர் இடையே பிரச்னையைத் தூண்டினாரா தமமுக தலைவர்? - கலெக்டர் விசாரணை!