தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 30, 2023, 3:55 PM IST

ETV Bharat / state

"அறநிலையத்துறையை எங்களிடம் கொடுங்க.. அப்புறம் பாருங்க": நீதிபதிகள் கருத்து

"இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பொறுப்பை நீதிபதி ஒருவரிடம் கொடுத்துப் பாருங்கள்; கோயில்களில் ஏற்படும் மாற்றங்களை ஒரு மாதத்தில் பார்க்க முடியும்" என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

High court bench Madurai
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த கணேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "விளாத்திகுளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பு பெறும் ஆபரணங்களும், சுமார் 1,500 ஏக்கர் நிலங்களும் உள்ளன. இதில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இதன் மூலம் கோயிலுக்கு பல்வேறு வகையில் வருமானம் ஈட்ட இயலும். இவ்வளவு வருமானமும், சொத்தும் கொண்ட கோயிலை, எந்த வருமானமும் இல்லாத கோயில் என முடிவு செய்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலுடன் இணைத்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். எனவே, விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலுடன் இணைத்து, இந்து அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வருமானம் குறைவாக இருப்பதால் அதனை துணைக் கோயிலாக கருதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துணைக்கோயிலின் வருமானங்கள் அனைத்தும் அதன் முதன்மை கோயிலின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். துணைக்கோயில் திருவிழா, அதிகாரிகளின் சம்பளம் போன்றவை முதன்மை கோயிலின் மூலம் வழங்கப்படும்" என வாதாடப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், "தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பொறுப்பை நீதிபதி ஒருவரிடம் கொடுத்துப் பாருங்கள்; தமிழ்நாடு கோயில்களில் ஏற்படும் மாற்றங்களை ஒரு மாதத்தில் பார்க்க முடியும் என தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 1,000 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பட்சத்தில் கோயிலுக்கான வருமானம் அதிகரிக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இக்கோயிலை எவ்வாறு துணைக்கோயில் என கூற முடியும்?

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் கடந்த நவம்பர் 2022ல் உத்தரவிட்ட நிலையில், இதுவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், விளாத்திகுளம் தாசில்தார், வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 3 மாதங்களில் ஒரு ஏக்கர் நிலத்தை கூட ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றாதது ஏன்?

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களின் பட்டியல், நிலத்தின் தன்மை, அதிலிருந்து கிடைக்கப்படும் வருமானம் போன்றவை குறித்த புள்ளி விவர அறிக்கையையும், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த திட்ட அறிக்கையையும் இந்து அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இக்கோயிலை திருச்செந்தூர் முருகன் கோயிலுடன் இணைத்து, இந்து அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரி.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details