மதுரை:வெளித்தோற்றத்தில் 10 வருடங்களுக்கு மேலாக திருநம்பியாக வாழ்ந்து வரும் 24 வயது முதுகலைப் பட்டதாரி, மற்றும் 21 வயது இளங்கலைப் பட்டதாரிகளான இருவர், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உளவியல் ஆலோசனையுடன் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர்.
அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் தலைமையில், மகப்பேறியல் துறைத்தலைவர் சுமதி, உதவிப் பேராசிரியர்கள் ஜெயந்தி பிரசாத், கிருஷ்ணவேணி, மயக்கவியல் துறை பேராசிரியர் பாப்பையா, சுதர்சன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால், அவ்விருவருக்கும் கர்ப்பப்பை மற்றும் கருமுட்டை நீக்குதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
திருநம்பி, திருநங்கைகளுக்கான பிரத்தியேக உள்நோயாளிகள் பிரிவு ஒட்டுறுப்பு அறுவைச சிகிச்சை துறைத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட இருவரும் உடல், மனதளவில் நலமாக உள்ளனர்.
மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் அவர்களை நலம் விசாரித்து அறுவை சிகிச்சை குழுவினரை், அதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டினார்.
170க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு தயார்
திருநங்கை, திருநம்பி சிறப்பு மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளரும் அகச்சுரப்பியல் துறைத்தலைவருமான ஸ்ரீதர் இதுதொடர்பாக கூறியதாவது, "திருநங்கை, திருநம்பிகளுக்கான சிறப்பு மருத்துவப்பிரிவு தமிழ்நாடு அரசின் தேசிய சுகாதாரத்திட்டத்தின் வழிகாட்டுதல் படி ஒவ்வொரு வியாழன் அன்றும் புறநோயாளிகள் பிரிவு எண்.4ல் செயல்பட்டு வருகிறது.
இதுவரை 37 திருநங்கை மற்றும் திருநம்பிகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய உளவியல் மற்றும் ஹார்மோன் சிகிச்சைகளில் உள்ளனர். 10 நபர்கள் மூன்றாம் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளனர்.
மதுரை மாவட்ட சமூக நலத்துறையுடன் இணைந்து இதுவரை 170க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.
வரும் காலங்களில் செயற்கை மார்பகம் பொருத்துதல் அறுவை சிகிச்சை, செயற்கை ஆணுறுப்பு பொருத்துதல் அறுவை சிகிச்சை, குரல் மாற்ற அறுவை சிகிச்சை மற்றும் லேசர் மூலம் தேவையற்ற முடி நீக்குதல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன" என்றார்.
இதையும் படிங்க:திருநர் சமூகத்துக்கு பேருந்தில் இட ஒதுக்கீடு அளிக்கும் மேற்கு வங்கம்!