மதுரை:உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கண்காட்சியை சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். பின்பு கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்கான சட்டத்தை முறைப்படுத்துவதில் அதிக கவனம் எடுத்து வழக்குகளை வேகப்படுத்த வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதன் தொடர்ச்சியாக தற்போது வழக்குகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
குற்ற செயல் நடைபெற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குழந்தை கடத்தல் மூலம் பிச்சை எடுப்பதற்கும் பிற உடல் உறுப்பு மாற்றத்துக்கும் அவர்களுடைய உழைப்பு சுரண்டல், பாலின சுரண்டலுக்காக பிள்ளைகள் கடத்தப்படுவது போன்றவை நடைபெறாமல் இருக்க உடனடியாக அவர்களை காவல் துறை மீட்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.
மற்ற மாநிலங்களில் உள்ள சிறுவர்களை அங்குள்ள உயர் அதிகாரிகள் ஆட்சித் தலைவரிடம் பேசி அந்த பிள்ளைகளை அவர்களின் தாய் தகப்பனிடம் ஒப்படைக்கும் பணியும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். இதனை தாய்மார்கள் கண்டிப்பாக உணர வேண்டும்” என்றார்.