மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக எரிவாயுக் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் முகிலன் அளித்த பேட்டியில், "கொட்டாம்பட்டி பகுதியில் முழுக்க முழுக்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம், விவசாயிகளுக்கு எப்போதாவது தான் பயன் தரும். தற்பொழுது வானம் பார்த்த பூமியாக இருப்பதால், முல்லை பெரியாறு நீட்டிப்பு கால்வாய் எங்கள் பகுதி சூரம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும் என நீண்ட காலமாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்.
கடந்த ஆண்டு பெரியார் கால்வாய் நீட்டிப்பு வேண்டி 100 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். தற்போது எங்கள் பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் காரணமாக விளைநிலங்கள் மக்களின் அனுமதி இன்றி அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.