தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காந்தி அரையாடை பூண்ட மதுரைக்கு வந்தது பெருமை' - காந்தியின் பேத்தி

காந்தி அரையாடை விரதம் பூண்ட மதுரை மண்ணில் கால்பதித்து இருப்பது பெருமையாக உள்ளதாக மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

By

Published : Sep 22, 2021, 7:37 AM IST

காந்தி சிலைக்கு மரியாதை
காந்தி சிலைக்கு மரியாதை

மதுரை:தேசப்பிதா மகாத்மா காந்தி கடந்த 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மதுரையில் அரையாடை விரதம் பூண்டார். அதன் நூற்றாண்டு விழா இன்று (செப்.22) கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியா (செப்.21) மதுரை வந்தார்.

காந்தி அருங்காட்சியகம் வளாகத்தில் உள்ள காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தென்னிந்தியா, குறிப்பாக தமிழ்நாடு எனது தாய் நிலம். இங்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமன்றி காந்தி அரையாடை பூண்ட மதுரை மண்ணில் கால் பதித்து இருப்பது பெருமையாக உள்ளது.

மதுரையில் காந்தி பேத்தி

ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டவர்

ஒரு சாதாரண விவசாயி போலவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் காந்தி. தன்னுடைய வாழ்க்கையில் பலவற்றை சோதனையாகவே மேற்கொண்டு அதனையே வாழ்வியலாக மாற்றிக்கொண்டவர். ஆன்மீகத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். ஆனால் அதற்காக துறவறம் பூண்டு இமயமலைக்கு செல்லவில்லை. மக்களோடு வாழ்ந்து தாம் உணர்ந்த ஆன்மீகத்தை பரப்ப விரும்பினார்.

நமது வாழ்க்கையில் சில மனிதர்கள் தான் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்வதாக உணர்ந்திருப்போம். எனது பார்வையில் அந்த சிறப்பிற்கு உரியவர்களாக காந்தியும், ராஜாஜியும் வாழ்ந்து காட்டினார்கள். காந்தி ஒருபோதும் ஆன்மீகம் தொடர்பாக பேசியதில்லை. ஆனால் இந்திய மக்கள் முன்பாக வாழ்ந்து காட்டினார்.

மதுரையில் காந்தி பேத்தி

ஆடை குறித்த கேள்வி

பல்வேறு வண்ண உடைகளோடு நீங்கள் வாழ்கிறீர்கள் ஆனால் உங்கள் தாத்தா காந்தி அப்படி வாழவில்லையே என்று என்னிடம் கூட சிலர் கேட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்வேன், வெள்ளை நிறம் என்பது அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியதாகும். அப்படி ஒரு வெண்மை நிறத்தோடு வாழ்ந்தவர் தான் மகாத்மா. அவர் தந்த வண்ணங்கள் தான் இன்றைக்கு நம்மோடு இருப்பவை.

காந்தி சிலைக்கு மரியாதை

மதுரை மக்கள் காந்தியின் மீதும் காந்தியத்தின் மீதும் மிகுந்த ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பதன் வெளிப்பாடுதான் காந்தி அரையாடை ஏற்ற இந்த நூற்றாண்டு விழா. இதில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார். தாரா காந்தியின் பேரன் விதூர் பரதன் பேட்டியின் போது உடனிருந்தார்.

மதுரையில் காந்தி பேத்தி

இதையும் படிங்க: 'நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிப்பார்'

ABOUT THE AUTHOR

...view details