மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்திலிருந்த செல்லாயி அம்மன் கோயில் காளை மூலி கடந்த 12ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.
இதைத்தொடர்ந்து காளையின் உடல் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கில் பட்டாசுகள் வெடித்து, மலர்கள் தூவி கொண்டாட்டமாக அடக்கம் செய்தனர்.
இந்நிகழ்வை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்திலும் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ பல ஷேர்கள் ஆனதில் காவல் துறையினரின் கண்ணில் சிக்கியுள்ளது. இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர் காளையின் இறுதிச்சடங்கு நடைபெற்ற கிராமத்திற்குச் சென்றனர்.
தீவிர விசாரணையில், அது நடந்தேறியது முடுவார்பட்டி கிராமம் என்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பாலமேடு உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணன், சிறப்புப் பிரிவு தலைமைக் காவலர் மணிராஜ் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.