கோயில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர் யார், சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு முழு விவரத்தை 10 மாதத்திற்குள் வெப்சைட்டில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..
மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கோயிலுக்கு சொந்தமான இடங்கள், கட்டண விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பட்டியல் வைக்கவும், பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.
மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘கோயில் சொத்துக்களை கண்டறிய அடையாள குழுவும், பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்கள், குடியிருப்போர், அனுபவத்தில் உள்ளோரிடம் இருந்து வரவேண்டிய ரூ.297.63 கோடி பாக்கியை கேட்டு 42,818 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில், 14 ஆயிரத்து 26 பேரிடம் இருந்து ரூ.32.49 கோடி வசூலாகியுள்ளது’’ என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘கோயில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர் யார், சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு உள்ளிட்ட முழு விவரத்தையும் 10 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:மல்லிகையின் விலை ரூ.1000 ஆக சரிவு!