மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்ட நிகழ்வு மக்கள் வெள்ளத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது மதுரை:உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், கடந்த எப்ரல் 23ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தினமும் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
மேலும், விழாவில் மீனாட்சி பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என முக்கிய விழாக்கள் நடைபெற்றதன் தொடர்ச்சியாக, இன்று காலை திருத் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், அருள்மிகு மீனாட்சி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள தேரடியில் சிறப்பு பூஜைகளை நடைபெற்றன.
இதனையடுத்து காலை 6.30 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. கீழமாசி வீதி தேரடியில் தொடங்கிய இந்த தேரோட்டம் தொடர்ந்து தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வழியாக வலம் வந்து இன்று நண்பகல் நிலையை அடையும். தேர் வலம் வந்த நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்ததுடன், நகர் முழுவதும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சித்தரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நாளை மறுநாள் (மே 5) நடைபெறுகிறது. நாளை காலை மதுரை மூன்றுமாவடி அருகே அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:Meenakshi Temple: மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம்.. மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் மதுரை மாநகரம்!