மதுரை:தமிழ்நாட்டில் உள்ள தென்மாவட்டங்களின் மருத்துவ வரலாற்றில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்பதன் அடிப்படையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று முடிவானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வெளியானது.
இதற்காக மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே நிலங்கள் தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்டன. 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அவனியாபுரம் - பெருங்குடி அருகே நடைபெற்ற விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து இந்த மருத்துவமனைக்கு ரூ.1264 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஜப்பானைச் சேர்ந்த ஜைகா என்ற நிறுவனத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 150 படுக்கை கொண்ட தொற்று நோய்ப் பிரிவு ஒன்றை தொடங்குவது என்ற புதிய முடிவின் காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.1264 கோடியில் இருந்து ரூ.1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது.
இதில் ஜைகா ரூ.1627.7 கோடியும், மீதத் தொகை மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவனை குறித்த வழக்கில், மத்திய அரசு அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதில், ‘மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனைக் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் 8 மாத காலங்கள் ஆகும் என்பதால், இதன் கட்டுமானப் பணிகள் வருகிற 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும். மதுரை எய்ம்ஸ்க்கான மருத்துவப் படிப்பு ராமநாதபுரம் மருத்துவமனையின் தற்காலிகக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குநர் மற்றும் நிர்வாக துணை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.