கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதனால் கோயில் சார்ந்த அனைத்து திருவிழாக்களும், நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நான்கு மாதங்களாக ரத்து செய்யப்பட்ட வண்ணம் உள்ளது.
மேலும், அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதம்தோறும் பௌர்ணமி நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனி மாத பௌர்ணமி திதி ஜூலை 4ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி ஜூலை 5ஆம் தேதி 10.58 மணிக்கு முடிவடைகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருப்பதால், ஜூன் 24ஆம் தேதி முதல் மதுரை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் கடைகள் மட்டும் திறப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள் கரோனா தொற்று ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக ஆனி மாத பவுர்ணமி ரத்து செய்யப்படுகிறது. இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடை விதித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
மதுரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முழு ஊரடங்கையும், கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பையும் கண்டுகொள்ளாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை சுற்றி கிரிவலம் சென்று வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் சென்று பூட்டப்பட்டிருக்கும் கோயில் வாசலிலும், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் விளக்கு ஏற்றி பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
கரோனா தொற்று பரவி வரும் வேளையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கிரிவலம் சென்று வருவதால் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:குழந்தையை குப்பைத்தொட்டியில் அமரவைத்து பணியில் ஈடுபட்ட துப்புரவுப் பெண்!