தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: காவல் துறையினர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவை வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்று அரசுத்தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : Jun 22, 2020, 5:13 PM IST

மதுரையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனைத் தடுக்கும் பணியில் பலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் போதுமானதாக இல்லை. பல இடங்களில் முகக்கவசம் கூட வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.

இவர்களது பணி மக்களைச் சார்ந்துள்ளது. இவர்களுக்கு சமூகப் பரவல் மூலம் நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் பல தன்னார்வலர்கள் முன்வந்து பணியாற்றுகின்றனர். அவர்களது பாதுகாப்பும் போதுமானதாக இல்லை. வேறு எந்தவிமான பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை.

இதனால், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடக துறையினர் உள்ளிட்டோரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலைத் தடுக்க பிபிஇ எனப்படும் கவசப் பொருட்கள் முக்கியம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இதேபோல் தூய்மைப் பணியாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றும் அவல நிலை உள்ளது. இதனால், கரோனா தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அனைவரையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

எனவே, காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வகையான பாதுகாப்பு கவச உடை, முகக்கவசம், கையுறை, ரப்பர் பூட்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கவும், முறையாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை அரசுக்கு பிறப்பித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது. குறிப்பாக மதுரை உயர் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட ஏழு மாநகராட்சிகளில் இந்த கோரிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை கண்காணித்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், நீதிமன்ற உத்தரவுகளை அரசுத் தரப்பில் முறையாகப் பின்பற்றவில்லை, முன்கள தடுப்பு பணியாளர்களுக்கு குறிப்பாக காவலர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மதுரை மாநகராட்சி, நெல்லை மாநகராட்சி, தூத்துக்குடி மாநகராட்சி உள்பட ஏழு மாநகராட்சிகள் நீதிமன்ற உத்தரவை முழுமையாகப் பின்பற்றி வருகின்றன என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்து உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details