மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினருக்குத் தேவையான அத்தியவாசியப் பொருள்களை மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ராஜன்செல்லப்பா வழங்கினார்.
மேலும் அத்தியவாசியப் பொருள்களைப் பெற வந்திருந்த மக்களை, அரசு கூறிய விதிகளின் படி, முகக் கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியை விட்டு இருக்கைகளில் அமர வைக்கப்பட்டும் இருந்தனர். அவர்கள் பொருள்களைப் பெற வரும்போது கைகளில் கிருமி நாசினி தேய்த்தும், போதிய பாதுகாப்புடன் பொருள்களைப் பெற்றுச் சென்றனர்.
அதன் பின்னர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம், 'மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி மாநில அரசு மக்களுக்குக் கரோனா தொற்று ஏற்படாத வகையில், பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது எனவும், அந்த தளர்வுகளை மக்கள் விதிமுறைகளை கடைப்பிடித்து பயன்படுத்த வேண்டும்' எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'திருப்பதியில் பக்தர்கள் தகுந்த இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது போல, கோயில் நகரமாம் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோயில் போன்ற புகழ்பெற்ற கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான தளர்வுகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்து அறிவிப்பார்’ என்று தெரிவித்தார்.