மதுரை:அரசு ராஜாஜி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை மார்ச் 25-ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சைக்கு கொண்டு வந்தார். அப்போது, செவிலியர்கள் குழந்தைக்கும் பெண்ணுக்கும் வயது வேறுபாடு அதிகமாக இருந்ததால், சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாய் யார் என கேட்டனர்.
அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். திருடிய குழந்தையாக இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவமனை காவல்நிலைய போலீசார் அந்தப் பெண்ணை விசாரித்தனர். அப்போது, அவர் உசிலம்பட்டி - கக்காரன்பட்டி- ஒத்தவீடு பகுதியைச்சேர்ந்த பாண்டியம்மாள் எனத் தெரியவந்தது. குழந்தையை அவரது தாயே விற்கக் கொடுத்ததாகவும், குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சை அளித்துவிட்டு விற்க முயற்சி செய்யலாம் என நினைத்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் பாண்டியம்மாளை மேலும் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. பாண்டியம்மாளுக்கு மூன்று பெண் பிள்ளைகள். அவரது கணவர் இறந்துவிட்டதால் குடும்பம் வறுமை நிலையில் இருந்துள்ளது. இதனால் 20 வயதான மூன்றாவது பெண்ணை திருப்பூருக்கு வேலைக்காக அனுப்பியுள்ளார்.
திருப்பூருக்கு வேலைக்குச் சென்றவர் ஒருவருடன் பழகிவந்த நிலையில் கருவுற்றுள்ளார். இந்த விஷயத்தை அவர் வீட்டில் கூறாமல் இருந்துவந்தநிலையில், வீட்டில் அவருக்கு வரன் பார்த்து திருமணத்திற்கு நிச்சயித்துள்ளனர். இந்தநிலையில் மகள் கருவுற்றிருப்பது பாண்டியம்மாளுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்தவர் செய்வதறியாது திகைத்துள்ளார்.