கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தவகையில் இன்று மட்டும் 669 பேருக்கு கரோனா பாதிப்பு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், நேற்று வரை 113 பேர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று புதிதாக நான்கு பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களும், 29 வயதுடைய ஒரு ஆணும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து அம்மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 117 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 73 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், 42 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை விரிவாக்க கட்டடத்தின், எதிரே இயங்கிவரும் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதுரையில் கரோனா சிகிச்சை முடிந்து 23 பேர் டிஸ்சார்ஜ்