தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் காலமானார் - former mla nanmaran has passed away

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நன்மாறன் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 74.

முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார்
முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார்

By

Published : Oct 28, 2021, 5:00 PM IST

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் நன்மாறன் (74). தொடக்கத்தில் தொழிற்சங்கவாதியாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் சிபிஎம் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். மிகக் கடினமான கருத்துக்களையும் மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகவும், நகைச்சுவையோடும் விளக்குவதில் நன்மாறன் வல்லவர். அதனாலேயே 'மேடைக் கலைவாணர்' என்ற அடைமொழியிட்டு அழைக்கப்பட்டார். தமிழில் முதுகலை பயின்றவர் நன்மாறன்.

இவர் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மீது கொண்ட பற்றால் அவர்களின் வரலாறுகளை புத்தகமாக எழுதி இருக்கிறார். நன்மாறன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் (தமுஎகச) மதுரைக் கிளை உறுப்பினராகவும், மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி, மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

1968இல் குறிஞ்சி இதழை நடத்தி வந்த பழ.நெடுமாறனுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவாக ‘ஊழியர் கலை எழுச்சி மன்றம்’ என்ற அமைப்பு இருந்தது. இதில் எம்.ஆர்.எஸ், மணி, புலவர் ராஜாமணி போன்றோர் இருந்தனர். அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் இலக்கிய கூட்டங்களில் நன்மாறன் கலந்து கொண்டார். 1971 இல் தேர்தல் பிரச்சார மேடைகளில் இவர் முதன்முதலாக பேச ஆரம்பித்தார்.

கடந்த 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக நன்மாறன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

நன்மாறன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வாய்ப்பை, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐ.டி.பார்க், டைடல் பார்க் வரை மதுரைக்கு கொண்டு வரவும் பயன்படுத்திக் கொண்டவர். இவர் மதுரையில் உயர் நீதிமன்ற கிளை உருவாக தன் பங்களிப்பை செலுத்தி இருக்கிறார். இன்றும் வாடகை வீட்டில் குடியிருக்கும் கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர் நன்மாறன். சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலங்களில் இவருடைய அலுவலகம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாள்களிலும் திறந்தே இருக்கும்.

மதுரை ஆரப்பாளையத்தில் தனது மனைவி சண்முகவள்ளியோடு வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் குணசேகரன் நாகமலைப் புதுக்கோட்டையிலுள்ள பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இளையமகன் ராஜசேகரன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராகப் பணி செய்து வருகிறார்.

அண்மையில் சொந்த வீடு ஒன்றை ஒதுக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வந்து மனு கொடுத்தார். இது மிக பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் வந்ததைக்கூட மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று (அக்.27) இரவு நன்மாறன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (அக்.28) சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையும் படிங்க:சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து: மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details