மதுரை: முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் காணொளி வாயிலாகச் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் கடன் சுமை வளருகிறது. திமுக ஆட்சியில் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2021ஆம் ஆண்டு முதல் கடன் சுமையை ஒப்பிட்டுப் பார்த்தால் 2021-22ஆம் ஆண்டில் கடன் தொகை ரூ.5,18,796 கோடியும், 2022-2023ஆம் ஆண்டில் கடன் தொகை ரூ.6,30,000 கோடியும், 2023-2024ஆம் ஆண்டில் கடன் தொகை ரூ.7,28,000 கோடியாக உள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் கரோனா மற்றும் ஜிஎஸ்டி வரி இழப்பைத் தாண்டி வாங்கிய கடன் சதவீதம் ஜிடிபி அளவில் 21.22 சதவீதம் தான். ஆனால் சொத்து வரி, மின்சார கட்டணம் மற்றும் இன்றைக்கு விலைவாசி ஆகியவற்றை உயர்த்தி, மக்களை அனைத்து துன்பங்களிலும் ஈடுபடுத்தி எந்த விதமான வளர்ச்சித் திட்டங்களையும் செய்யாமல், சமூக நலத்திட்டங்களை எல்லாம் ரத்து செய்துவிட்டு, எந்த விதமான கட்டமைப்புகளையும் உருவாக்காமல் திமுக அரசு வாங்கிய கடன் ஜிடிபி அளவில் 26 சதவீதமாகும்.
மேலும், அதிமுக ஆட்சியில் பொருளாதார மாநிலங்களாக மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது 15.7 சதவீத ஜிடிபி பங்களிப்பு கொண்டு மகாராஷ்டிரா முதலாவது இடத்திலும், முன்னர் 5ஆவது இடத்தில் இருந்த உத்தரப்பிரதேச மாநிலம் 9.2 சதவீத ஜிடிபி பங்களிப்பைக் கொண்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால், 9.1 சதவீத ஜிடிபி பங்களிப்பைக் கொண்ட தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.