கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சேரன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வெளிநாட்டு வேலை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். வெளிநாட்டு வேலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட தனது அனுபவங்களை ஊர் ஊராகச் சென்று விளக்குகிறார். தான் கொண்டு செல்லும் பெட்டியிலேயே 'நான் வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்' என எழுதி, தன்னுடைய தொலைபேசி எண்ணையும் அதிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.
மதுரை வந்திருந்த அவரை ஈடிவி பாரத் செய்திகளுக்காக சந்தித்து உரையாடியபோது, கடலூர் மாவட்டத்தில் தையல் தொழில் செய்து வந்த நான், வெளிநாட்டு வேலை எனும் மோகத்துக்குள் சிக்கி, 1998ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்றேன். ஆனால் அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது எனக்குத் தரப்பட்டது ஆடு மேய்க்கும் வேலை என்பது. படிப்பறிவு இல்லாத காரணத்தால், ஏஜெண்டாக இருந்த எனது உறவினராலேயே ஏமாற்றப்பட்டேன்.
என்னைப்போல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளிநாட்டு வேலை எனும் ஆசையில், முன்பின் தெரியாத நபர்களிடம் பணத்தைக் கொடுத்து, சுற்றுலா விசாவில் சென்று ஏமாற்றப்படுவது தொடர்கதையாகிறது. ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டி வெளிநாட்டில் டெய்லர் வேலை என்ற கனவில் சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சிதான். எனக்கு முன்பாகச் சென்றவர்களும் அதேபோன்று அங்கே ஆடு மேய்த்தது இன்னும் வேதனையாக இருந்தது. பிறகு தமிழ்நாட்டிற்கு வந்து அனைவரிடமும் என்னையே உதாரணமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கினேன்.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம் போன்ற வறட்சி மிகுந்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களே வெளிநாட்டு வேலை என்ற வலைக்குள் சிக்கி சின்னாப்பின்னமாகின்றனர். அதனால், தற்போது தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்றார்.