சென்னையைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட விஷேச தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதாலும், பருவ மழை சரிவர பெய்யாததாலும் சதுரகிரி மலையில் கடும் வறட்சி நிலவுகிறது.
இதனால், இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழு, போதிய காவல்துறை பாதுகாப்பு, முறையான அவசரகால மருத்துவ வசதி, பாதுகாப்பான தங்கும் வசதி, சாலை பராமரிப்பு, போதிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்து அறநிலைய துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்ததாகவும், அதுகுறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, விருதுநகர் மாவட்டத்தின் சதுரகரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்க கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், இவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதன்பின், குடிநீர் என்பது பக்தர்களுக்கும், வன உயிரினங்களும் இன்றியமையாதது என்றாலும், இதற்காக வனப் பகுதிகளை சிதைப்பதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.